நம் பாரம்பர்யம்..!அழிந்துபோகவில்லைஇன்னமும் நடக்கிறது இளவட்டக்கல் தூக்கும் போட்டி - THAGAVAL
Ads Here

Monday, 15 January 2018

நம் பாரம்பர்யம்..!அழிந்துபோகவில்லைஇன்னமும் நடக்கிறது இளவட்டக்கல் தூக்கும் போட்டி

 தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி கிராமத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்றவர்கள் ஆர்வத்துடன் இளவட்டகல்லை தூக்கி அசத்தினர்.
Ilavattakal competition

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்  அருகில் உள்ள  தாப்பாத்தி கிராமத்தில் ஊர் கமிட்டி  சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான  விளையாட்டு போட்டிகள் கிராமத்திலுள்ள  மைதானத்தில் நடைபெற்றது.
Ilavattakal competition
விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதற்கு முன்,  மாட்டுப்  பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வளர்க்கும் மாடுகளுடன் மைதானத்தில் வலம் வந்தனர். மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பழம் சாப்பிடக் கொடுக்கப்பட்டது.
 தொடர்ந்து சிறுவர் - சிறுமியர்களுக்கான மியூசிக்கல் சேர், சாக்கு போட்டி, ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகள்  நடைபெற்றன. தொடர்ந்து இளைஞர்களுக்கான  இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, இளவட்டக்கல்லை தூக்கி 3 முறை மைதானத்தினை சுற்றி வந்து அசத்தினர்.

இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற கணேசனிடம் பேசினோம்., "இந்தக் கல் சுமார் 100 கிலோ எடை கொண்டது. வழுவழுப்பாக எந்தப் பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத முழு உருண்டை வடிவில் இருக்கும். இந்த இளவட்டக் கல்லுக்கு "கல்யாணக் கல்" எனவும் பேரு உண்டு. அந்தக் காலத்துல கல் தூக்கினாத்தான் கல்யாணம் நடக்கும். பொண்ணு குடுப்பாங்கன்னு எங்க தாத்தா சொல்லுவாங்க. எடுத்த உடனே இந்தக் கல்லைத் தூக்கிட முடியாது.
முதலில் குத்தங்காலிட்டு உட்காந்து கொண்டு கல்லை ரெண்டு கைகளாலும் சேர்த்து அணைச்சு, லேசா எழுந்து அப்படியே கல்லை முழங்காலுக்கு நகர்த்தி, அப்படியே மெதுவா நெஞ்சின் மீது ஏத்தி, மெதுவாக தோள்பட்டைக்கு நகர்த்தி தோளில் வச்சு சுமக்க வேண்டும். இப்படி யாரு அதிக முறை கல்லைத் தூக்கி சுமக்குறாங்களோ, அவர்தான் வின்னர்.... அவருக்குதான் முதல் பரிசு. ஊர்க் கோவில் திருவிழா, சித்திரை 1-ம் நாள் மற்றும் பொங்கல் திருவிழா ஆகிய திருவிழா நாட்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் இந்த இளவட்டக் கல் தூக்கும் போட்டியும் நடத்துறோம்.
 Ilavattakkal








மற்ற போட்டிகள்ல கலந்துக்குற எண்ணிக்கையில கால் வாசி பேர் கூட இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் கலந்துக்க மாட்டாங்க. பத்து பதினைந்துநாள் தூக்கிப் பழகுனாத்தான் முட்டு வரைக்குமாவது தூக்க முடியும். தோளில் தூக்கி வைக்க, குறைந்தபட்சம் ரெண்டு மாசமாவது தொடர்ந்து தூக்கிப் பழகணும். இப்பவும் கல்லு தூக்கினாத்தான் கல்யாணம் நடக்கும்னா, நூறுல பத்து பேருக்கு கல்யாணம் நடக்குறதே கஷ்டம். நம்ம பாரம்பர்ய வீரவிளையாட்டுகளில் கல் தூக்குறதும் உண்டு. வீரவிளையாட்டா வழக்கத்தில் இருந்த இளவட்டக்கல் தூக்கும் வழக்கம் இப்போ விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றா மாறிடுச்சி" என்றார்.தொடர்ந்து இளைஞர்களுக்கான கபடிப் போட்டியும் நடைபெற்றது. இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment