
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், வழக்கம் போல விவசாயிகளும் நாளுக்கு நாள் தவித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கு வறட்சியான காலநிலை, பருவம் தவறிய மழை எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மிக முக்கியமான காரணம் தமிழக அரசின் திட்டங்கள் ஏட்டளவில் நின்றுவிடுவதுதான். அதற்கு நிதி செலவானதாகக் கணக்குகளும் காட்டப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு விவசாய மானியத் திட்டத்தையும் ஆரம்பித்து முழுமையாக முடித்ததாகத் தெரியவில்லை. எல்லாமே பாதி அறுந்த கயிறாகத் தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. விவசாயிகளும் வழக்கம்போலப் போராட்டங்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கான தீர்வுகள்தான் இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை.
தமிழக விவசாயத் திட்டங்களின் முன்வரலாறு இப்படியிருக்க உலக வங்கியானது தமிழ்நாட்டில் நீர்ப்பாசனத் திட்டங்களை நவீனமயமாக்குவதற்குச் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 318 மில்லியன் டாலர் (இந்தியாவின் மதிப்பில் 2,000 கோடி) கடனை வழங்கவிருக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நீர் மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் காலநிலைக்கு ஏற்றார்போலத் தொழில் நுட்பங்களை மாற்றிக் கொள்ள இந்த நிதியானது தரப்படுகிறது. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்துச் சந்தை வாய்ப்புகளும் அதிகரிக்கும். மத்திய அரசு, உலக வங்கி மற்றும் தமிழக அரசு இடையே கடந்த செவ்வாய் அன்று நீர் மேலாண்மைக்கான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது எந்தளவிற்கு பயனளிக்கும்?

"இதன் மூலம் 5 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் மேம்பட்ட மற்றும் நவீனமயமான நீர்ப்பாசன முறைகளின் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், 4,800 நீர்ப்பாசனத் தேக்கங்கள், 66 தடுப்பணைகள் மற்றும் 477 ஆறுகளின் கிளைகள் மறு சீரமைக்கப்பட்டு, மாநிலத்தில் பாசன நீர்நிலைக்கு மொத்தமாக நீர் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தொடர்ந்து நீர் வளம் குறைந்துகொண்டே வருகிறது. அதனால் எதிர்காலம் மிக மோசமான நிலை நிச்சயமாக ஏற்படும். இந்த நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ள முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால்தான் நீர்ப்பாசனத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடம் நிதி பெறுகிறோம்" என நிதி அமைச்சகப் பொருளாதாரச் செயலகத்தின் கூட்டு செயலாளர் சமீர் குமார் கரே சொல்கிறார்.
"நீர்ப்பாசனத் தேக்கங்களைச் சீரமைத்தல் மற்றும் நவீனமாக்கலால் சமுதாயத்திலும், விவசாயிகள் மத்தியிலும் விவசாயத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். இதனால் விவசாயம் மேம்பட்டு அதிகமாக உணவு உற்பத்தி நடக்கும். மேலும், நீர் மேலாண்மை சரியாக இருந்தால் காலநிலையால் ஏற்படும் ஆபத்துக்களும் குறைவாகவே இருக்கும். தற்போது 1 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாசன நிலங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் முழுமையாகப் பாசனமாக மாறும். இத்திட்டமானது, தமிழ்நாடு அதன் விவசாயத் துறையின் முழுத் திறனைத் திறக்கும் முயற்சிகளுக்கு உதவுவதாக அமையும். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நீர் திறனை அதிகப்படுத்தினால் அதிக வருமானம் கொடுக்கும் பயிர்களையும், காலநிலை மாற்றத்தின்போது அதை எதிர்கொள்ளும் பயிர்களையும் உற்பத்தி செய்ய இத்திட்டம் உதவும்" என்கிறார், உலக வங்கிக்கான நிகழ்ச்சித் தலைவர் ஜான் ப்லோமகிஸ்ட்.
No comments:
Post a Comment