சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன. இதற்காக சென்னையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் புதிய முயற்சி ஒன்றை எடுத்தார். இந்த ஆண்டு விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாட முடிவுசெய்து அதற்கு ஏற்ப போக்குவரத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிச.31 இரவு 9 மணி முதல் ஜன.1 அதிகாலை 2 மணி வரை 176 இடங்களில் போலீஸ் தடுப்புகள் அமைத்து, 4500 போலீசாருக்கு மேல் பாதுகாப்பு போட்டு கடும் வாகன தணிக்கை செய்யப்பட்டது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, ரேஸ் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு சிக்கினால் கடும் நடவடிக்கை என்று அறிவுறுத்தப்பட்டது. சென்னை ஜெமினி , கத்திப்பாரா மேம்பாலம் தவிர அனைத்து பாலங்களும் மூடப்பட்டன.
ஆனாலும் இந்த ஆண்டும் விபத்துகள் எண்ணிக்கை குறையவில்லை.
கடந்த ஆண்டைப்போல் உயிரிழப்பு அதிகம் இல்லை என்றாலும் விபத்தில் காயமடைந்தவர்கள் அதிகம். நேற்று இரவு முதல் அதிகாலை வரை நடந்த விபத்தில் 177 பேர் காயமடைந்தனர். 87 பேர் பலத்த காயமடைந்து உள் நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர
நேற்று சென்னை எழும்பூரில் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ராபின், இவரது மகன் ரேமான்(29). இவர் எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு மது போதையில் மோட்டார் சைக்கிளில் வீட்டருகே வரும்போது பிளாட்பாரத்தில் ஏறி அங்கு நின்றிருந்த குட்டி யானை வாகனத்தில் மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார்.
இதே போல் ஆவடி, அண்ணாநகரைச் சேர்ந்த பால் (27), பச்சையப்பா கல்லூரியில் பயிலும் ராஜேஷ் (22) மற்றும் சிமியான் (17) மூவரும் நேற்று நள்ளிரவு ஒரே மோட்டார் சைக்கிளில் அம்பத்தூர் சிடிஎச் சாலை பேருந்து நிலையம் எதிரில் வேகமாக வந்து சாலைத் தடுப்பில் மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய பால் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிமியோனின் இடது கை உடைந்தது. இருவரும் ஆவடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ராஜேஷ் நிலை கவலைக்கிடமாக உள்ளது
No comments:
Post a Comment